விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சட்டசபை முன் 18, 19-ந்தேதிகளில் மறியல் போராட்டம் அய்யாக்கண்ணு பேட்டி
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி வருகிற 18, 19-ந்தேதிகளில் தமிழக சட்டசபை முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அய்யாக்கண்ணு கூறினார்.
திருச்சி,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் 100-க்கு 80 சதவீத வயல்களில் சாகுபடி இல்லை. தண்ணீர் இல்லாததால் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது, எனவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்யவேண்டும். கரும்பு ஆலை முதலாளிகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
பணம் கொடுக்க மறுக்கும் ஆலை முதலாளிகளை கைது செய்ய உத்தரவிடவேண்டும். சீர்மரபினர் சான்றிதழ் பெற்ற அனைவருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 17-ந்தேதி (நாளை) முதல்-அமைச்சரை சந்தித்து பேச தேதி கேட்டு இருக்கிறோம். முதல்-அமைச்சர் சந்திக்க மறுத்து விட்டால் 18 மற்றும் 19-ந்தேதிகளில் தமிழக சட்டசபை முன் விவசாயிகளை திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.