உடுப்பியில் தனியார் பஸ் கண்டக்டர் கொலையில் நண்பர் கைது பணத்தகராறில் தீர்த்துக்கட்டியது அம்பலம்

உடுப்பியில், தனியார் பஸ் கண்டக்டர் கொலையில் நண்பரை போலீசார் கைது செய்தனர். பணத்தகராறில் தீர்த்துக்கட்டியது அம்பலமானது.

Update: 2019-07-15 22:00 GMT
மங்களூரு,

உடுப்பி மாவட்டம் இரியடுக்கா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெரடூர் அருகே பைரம்பள்ளியை சேர்ந்தவர் பிரசாந்த் பூஜாரி(வயது 38). தனியார் பஸ் கண்டக்டர். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த பிரசாந்த் பூஜாரியை மர்மநபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இதுகுறித்து இரியடுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஜேம்ஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

பணத்தகராறில் தீர்த்துக்கட்டியது...

இந்த நிலையில் பிரசாந்த் பூஜாரி கொலையான 12-ந் தேதியில் இருந்து அப்பகுதியை சேர்ந்த அவரது நண்பரான ரக்‌ஷக்(19) என்பவர் தலைமறைவானது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரக்‌ஷக்கை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது பிரசாந்த் பூஜாரியை கொலை செய்ததை ரக்‌ஷக் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் கொலையான பிரசாந்த் பூஜாரி, ரக்‌ஷக்கின் பெயரில் வங்கியில் கடன் வாங்கி இருந்ததும், கடனை திரும்ப அவர் சரியாக செலுத்தவில்லை என்பதும், இதனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பிரசாந்த் பூஜாரியை, ரக்‌ஷக் தீர்த்துக்கட்டியதும் அம்பலமானது. கைதான ரக்‌ஷக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்