அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து சாவு
அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து இறந்தான்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா மரூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவசி. இவரது மனைவி சைலா. இந்த தம்பதியின் மகன் சரோன் (வயது 16). இந்த நிலையில் சரோன் சிருங்கேரி தாலுகா பேகார் கிராமத்தில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி இருந்து 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சரோன் பள்ளியில் அமர்ந்து சக மாணவர்களுடன் பேசி கொண்டு இருந்தான். அப்போது திடீரென அவன் மயக்கம் போட்டு கீழே விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் சென்று தெரிவித்தனர்.
சாவு
இதையடுத்து சரோனை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொப்பா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சரோனை பரிசோதித்த டாக்டர்கள் சரோனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அவனை மேல்சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சரோன் பரிதாபமாக இறந்து விட்டான்.
இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர் விரைந்து வந்தனர். மேலும் சரோனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து சிருங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.