கொல்லிமலை அடிவாரத்தில் தண்ணீர் லாரி சிறைபிடிப்பு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஆவேசம்
கொல்லிமலை அடிவாரத்தில் தண்ணீர் லாரியை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து சிறைபிடித்தனர்.
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வாழவந்திக்கோம்பை ஊராட்சியில் உள்ளது தாதங்கோம்பை கிராமம். இங்குள்ள பெரிய கிணறு பகுதியில் ஒரு தனியார் நிலத்தில் இருந்து கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் தண்ணீர் எடுத்து வணிக நிறுவனங்களுக்கு வினியோகம் செய்ய லாரிகளில் தண்ணீர் பிடித்து கொண்டு சென்றனர்.
இதை அந்த பகுதி மக்கள் கண்டித்தனர். தனியார் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து லாரிகளில் ஏற்றிச்செல்வதால் அருகில் உள்ள ஊராட்சி ஆழ்துளை கிணறு வறண்டு விட்டதாகவும் அந்த பகுதி மக்கள் குறை கூறினர். ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் எடுத்து செல்லப்பட்டது.
இதனால் ஆவேசம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று அதிகாலையில் பெரியகிணறு பகுதியில் ஒன்று திரண்டனர். அப்போது தண்ணீர் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின்னர் அந்த லாரியின் முன் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சேந்தமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். சிறைபிடித்த லாரியை விடுவித்து அதில் இருந்த தண்ணீரை திரும்பவும் கிணற்றில் கொட்ட ஏற்பாடு செய்தனர்.
மேலும் இனி வரும் காலங்களில் தண்ணீர் பிடித்து செல்லக்கூடாது என்று எச்சரித்தனர். இதையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.