இருபிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்த சதி, கோவையில் 3 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை - 2 வாலிபர்களிடம் விசாரணை
இருபிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்த சதி செய்ததாக கோவையை சேர்ந்த 3 பேரின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். இதில் 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்களுடன் கோவையை சேர்ந்த சிலருக்கு சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கோவையை சேர்ந்த 6 பேர் வீடுகளில் அதிரடி சோதனை செய்தனர். அத்துடன் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகியோரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அதுபோன்று கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கோவையை சேர்ந்த முகமது உசேன், சபியுல்லா, ஷாஜகான் ஆகியோரின் வீடுகளில் சோதனை செய்தனர். இதில், அவர்களுக்கும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவான கருத்துகளை பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் கோவை தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஆட்டோ பைசல் என்ற பைசல் ரகுமான், கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (27) உள்பட 3 பேர் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்த சதி செய்ய திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் 3 குழுவாக பிரிந்து நேற்று காலை 5.30 மணிக்கு அவர்கள் 3 பேரின் வீடுகளுக்கும் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீடுகளில் இருந்த ஆட்டோ பைசல், சதாம் உசேன் ஆகியோரிடமும், அவர்களின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அவர்களின் வீடுகளில் இருந்து செல்போன், பென்டிரைவ், மடிக்கணினி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், அவர்கள் 2 பேரும், மதரீதியாக இருபிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்த சதி செய்து, சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது தெரியவந்தது. எனவே போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த சம்பவத்தில் போலீசார் பிடித்து உள்ள சதாம் உசேன் என்பவர், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானவர் என்பதும், மற்றொரு நபர் ஒரு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:- ஆட்டோ பைசல், சதாம் உசேன் உள்பட 3 பேர் சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் குரூப் அமைத்து மதரீதியான தகவல்களை பரிமாறி உள்ளனர். அத்துடன் அவர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக செயல்பட்டு இரு பிரிவினர்கள் இடையே மோதல் ஏற்படுத்த சதி செய்ததுடன், அது தொடர்பான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
எனவே அவர்கள் 3 பேர் மீது கோவை பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அமைத்த வாட்ஸ்-அப் குரூப்பில் இருப்பவர்கள் யார்?, அவர்கள் எத்தகைய தகவல்களை பரிமாறிக்கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.