ராஜினாமா விவகாரத்தில் ராமலிங்கரெட்டி எடுக்கும் முடிவே இறுதியானது பதவி விலகிய எம்.எல்.ஏ. முனிரத்னா பேட்டி
ராஜினாமா விவகாரத்தில் ராமலிங்கரெட்டி எடுக்கும் முடிவே இறுதியானது என்று பதவி விலகிய எம்.எல்.ஏ. முனிரத்னா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
ராஜினாமா விவகாரத்தில் ராமலிங்கரெட்டி எடுக்கும் முடிவே இறுதியானது என்று பதவி விலகிய எம்.எல்.ஏ. முனிரத்னா தெரிவித்துள்ளார்.
முனிரத்னா எம்.எல்.ஏ.
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் பெங்களூருவை சேர்ந்த ராமலிங்கரெட்டி, முனிரத்னா, பைரதி பசவராஜ், சோமசேகர் முக்கியமானவர்கள் ஆவார்கள். ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் தான், அவருடன் சேர்ந்து முனிரத்னா, பைரதி பசவராஜ், சோமசேகரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் தங்கி இருந்த முனிரத்னா எம்.எல்.ஏ. மும்பைக்கு புறப்பட்டு சென்று, அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களுடன் தங்கி உள்ளார். பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ள முனிரத்னா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
எச்.டி.ரேவண்ணாவே காரணம்
நான் அரசியலிலும், சினிமாவிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். தற்போது குருஷேத்திரா என்ற படத்தை தயாரித்துள்ளேன். அந்த படத்தின் பட்ஜெட் பல கோடி ரூபாய் ஆகும். இதனால் அந்த படத்தை 5 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருந்தேன். அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். குருஷேத்திரா படம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்துள்ளேன். இதனால் படத்தை வெளியிடுவதற்காக ஐதராபாத்திற்கு சென்றிருந்தேன். தற்போது மும்பை வந்துள்ளேன். எனது பட வேலையுடன், இங்கு தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசியுள்ளேன்.
எனது தொகுதியில் உள்ள சில பிரச்சினைகளுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளேன். என்னுடைய தொகுதிக்கு மெட்ரோ ரெயில் சேவை, சாலை வசதியை செய்து கொடுக்கும்படியும், அதற்கான நிதியை ஒதுக்கும்படியும் கேட்டு இருந்தேன். இதனை முதல்-மந்திரி குமாரசாமி கண்டு கொள்ளவில்லை. இதற்கு காரணம் மந்திரி எச்.டி.ரேவண்ணா தான். பொதுப்பணித்துறை மந்திரியான அவர் எனது தொகுதிக்கு வர வேண்டிய நிதி, பிற வசதிகள் கிடைப்பதை தடுத்துவிட்டார். நான் பதவியை ராஜினாமா செய்வதற்கு எச்.டி.ரேவண்ணாவே காரணம்.
ராமலிங்கரெட்டி எடுக்கும் முடிவே...
எல்லாவற்றுக்கும் மேலாக ராமலிங்கரெட்டி தான் எங்களுக்கு முக்கியம். நான், சோமசேகர், பைரதி பசவராஜ் ஆகிய 3 பேரும் ராமலிங்கரெட்டியிடம் ஆலோசனை கேட்டு தான் ராஜினாமா செய்திருந்தோம்.
அதனால் ராஜினாமா திரும்ப பெறுவது குறித்தும் ராமலிங்கரெட்டி தான் முடிவு எடுக்க வேண்டும். ராஜினாமாவை திரும்ப பெறும் விவகாரத்தில் ராமலிங்கரெட்டி எடுக்கும் முடிவே இறுதியானது. அவர் எடுக்கும் முடிவுக்கு நான் உள்பட 3 எம்.எல்.ஏ.க்களும் கட்டுப்படுவோம்.
ராமலிங்கரெட்டியின் பேச்சை கேட்டே நாங்கள் நடப்போம். நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறுமா?, கூட்டணி அரசு நீடிக்குமா? என்பது பற்றி எனக்கு தெரியாது. தற்போது மும்பையில் இருக்கிறேன். குருஷேத்திரா படம் தொடர்பாக சென்னை, கேரளாவுக்கு செல்ல இருக்கிறேன்.
இவ்வாறு முனிரத்னா எம்.எல்.ஏ. கூறினார்.