குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து ஆதிவாசி சாவு
குன்னூர் அருகே 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து ஆதிவாசி உயிரிழந்தார்.
குன்னூர்,
மஞ்சூரில் இருந்து கெத்தைக்கு செல்லும் சாலையோரத்தில் பெள்ளத்திக்கொம்பை ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் குணா என்ற குட்டன்(வயது 45). தேன் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி சாவித்திரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் குட்டன் கடந்த 10-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த காளியப்பன்(35), சந்திரன்(35), ராமன்(27) ஆகியோருடன் குன்னூர் அருகே பவானி எஸ்டேட் அருகிலுள்ள குரங்குமேடு வனப்பகுதிக்கு தேன் எடுக்க சென்றார். அங்குள்ள சேட்டு கொடார் என்ற இடத்தில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக 50 அடி பள்ளத்தில் குட்டன் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவருடன் வந்தவர்கள் வனத்துறையினருக்கும், கொலக்கொம்பை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதி என்பதால், உடனடியாக உடலை மீட்கும் பணியில் ஈடுபட முடியவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு குட்டனின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் தொட்டில் கட்டி வனப்பகுதியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் குட்டனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை ஏற்று குட்டனின் உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர். தேன் எடுக்க சென்ற ஆதிவாசி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.