ஊருக்குள் நுழைய காட்டு யானைகள் முயற்சி: எழுப்பும் துப்பாக்கியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு

கூடலூர் எல்லையோரம் ஊருக்குள் நுழைய காட்டு யானைகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதனால் முதுமலை வனத்துறையினர் வெடிச்சத்தம் எழுப்பும் துப்பாக்கியுடன் இரவு-பகலாக கண்காணித்து வருகின்றனர்.

Update: 2019-07-13 22:02 GMT
கூடலூர்,

கேரள-கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் கூடலூர் அமைந்துள்ளது. அடர்ந்த வனங்களும், முதுமலை, முத்தங்கா புலிகள் காப்பகங்களும் அருகே உள்ளதால் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்தில் போதிய தீவனம் கிடைக்காததால் உணவு தேடி இடம் பெயரும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று நாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கூடலூர்- முதுமலை புலிகள் காப்பக கரையோரம் தொரப்பள்ளி, குனில், ஏச்சம்வயல், புத்தூர்வயல், வடவயல், போஸ்பாரா உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளது. முதுமலை வனத்தில் இருந்து தினமும் காட்டு யானைகள் இரவில் வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் கூடலூர் பகுதியில் காட்டு யானைகளால் தினமும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

கடந்த 6-ந் தேதி பால் ஏற்றி சென்ற ஜீப்பை காட்டு யானை மூட்டி தள்ளியதில் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுதவிர தொரப்பள்ளி பஜாருக்குள் வந்து சுற்றுலா பயணிகளின் வாகனங்களையும் தினமும் இரவில் தாக்கி வருகிறது. இதனால் யானைகள் வருகையை தடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் வருவாய்துறை, போலீசார், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

காட்டு யானைகள் வருகையை தடுக்க ஜம்பு, வாசிம் கும்கி யானைகளை கொண்டு வந்து கூடலூர்- முதுமலை எல்லையான தொரப்பள்ளியில் வனத்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் ஊருக்குள் காட்டு யானைகள் வராமல் இருக்க வனத்துறையினர் தீ மூட்டி இரவு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈட்டு வருகின்றனர். இதற்காக தொரப்பள்ளி, குனில், ஏச்சம்வயல், வடவயல் உள்பட பல இடங்களில் வனத்துறையினர் 6 குழுக்களாக பிரிந்து ரோந்து செல்கின்றனர். மேலும் வெடிச்சத்தத்தை எழுப்பும் துப்பாக்கியை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் இரவில் ஊருக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. இதனால் 6 குழுக்கள் எல்லையோர கிராமங்களில் மழை, குளிரையும் பொருட்படுத்தாது கண்காணித்து விரட்டி வருகிறோம். இதேபோல் தொரப்பள்ளி பஜாருக்குள் ஒரு காட்டு யானை அடிக்கடி நுழைய முயன்று வருகிறது. இதனால் கும்கி யானைகள் உதவியுடன் விரட்டியடிக்கப்படுகிறது. உயரதிகாரிகளின் மறு உத்தரவு வரும் வரை கண்காணிப்பு பணி நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்