தூத்துக்குடி இளம்பெண் கொலை வழக்கு: “திருமணத்துக்கு மறுத்ததால் கழுத்தை அறுத்து கொன்றேன்” கள்ளக்காதலன் வாக்குமூலம்
“திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்றேன்” என்று தூத்துக்குடி இளம்பெண் கொலையில் கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி,
“திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்றேன்” என்று தூத்துக்குடி இளம்பெண் கொலையில் கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இளம்பெண் கொலை
தூத்துக்குடி மில்லர்புரம் பாரதிநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் நடேஷ் (வயது 34). இவருடைய மனைவி மகாராணி (28). இவர்களுக்கு 5 வயதில் விம்ரித் என்ற மகன் உள்ளான். மகாராணி கடந்த 2-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, மர்மநபரால் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், மகாராணி கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி அரிராம்நகர் 2-வது தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் இளவரசன் (25) கடந்த 3-ந்தேதி தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை தூத்துக்குடி சிப்காட் போலீசார், காவலில் எடுத்து கைது செய்து விசாரித்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
அப்போது இளவரசன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
மகாராணிக்கும், எனக்கும் 4 ஆண்டுகள் பழக்கம் இருந்தது. இது கள்ளக்காதலாக மாறியது. அவருடைய மகனை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து செல்வது, பின்னர் வீட்டுக்கு அழைத்து வருவது எல்லாம் நான் தான் செய்து வந்தேன். மகாராணியின் கணவர் வெளிநாட்டில் இருந்ததால் நானும், மகாராணியும் பல நேரங்களில் தனிமையில் இருந்துள்ளோம். இதனால் எனக்கு மகாராணி மீது அளவுக்கு அதிகமாக அன்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மகாராணியின் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். இதனால் மகாராணி என்னிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார்.
சில நாட்களுக்கு முன்பு அவரிடம், நாம் திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்று விடலாம் என்று கூறினேன். அதற்கு அவரும் தயாராக இருந்தார். ஆனால் தற்போது வேண்டாம் என்று மறுத்து வந்தார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
திருமணத்துக்கு மறுப்பு
மற்றொரு நாள் மகாராணியை பார்க்க சென்றபோது, அவருடைய தந்தை வீட்டில் இருந்தார். அவர் என்னை இங்கு வரக்கூடாது என்று கூறினார். இதனால் மகாராணி என்னை விட்டு சென்று விடுவாரோ என்ற பயம் எனக்குள் வந்தது. சம்பவத்தன்று காலையில் மகாராணி வீட்டுக்கு சென்றேன். அப்போது, நாம் திருமணம் செய்து கொள்வோம், அல்லது 2 பேரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறினேன். அதற்கு அவர், தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டார்.
இதனால் வீட்டில் இருந்த பிளேடால் என் கையை அறுத்துக்கொண்டேன். பின்னர் அவரது கையையும் அறுத்தேன். அதனை அவர் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவரது கழுத்தில் பிளேடால் பல முறை அறுத்தேன். ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் நான் அங்கிருந்து வெளியே வந்து விட்டேன். பின்னர் எனது வீட்டுக்கு சென்று புதிய சட்டையை மாற்றிக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தென்காசியில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டேன். பின்னர் போலீசுக்கு பயந்து கோர்ட்டில் சரண் அடைந்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.