கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2019-07-11 21:45 GMT
கோவில்பட்டி, 

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா

சுதந்திர போராட்ட வீரரான வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவர் பிறந்த ஊரான கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ மொத்தம் 230 பயனாளிகளுக்கு ரூ.97 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் 13 பேருக்கு முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணையும், 98 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 87 பெண்களுக்கு ஸ்கூட்டரும், 32 பேருக்கு தொழில் கடனாக ரூ.9 லட்சத்து 60 ஆயிரமும் வழங்கப்பட்டது.

முன்னதாக வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரர்களான மீனாட்சிதேவி, அழகு முத்தம்மாள், ராஜேசுவரி, சின்ன துரைச்சி, ராணி, வனஜா ஆகியோருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சால்வை அணிவித்து கவுரவித்தார்.

மேலும் செய்திகள்