மகள் கடத்தப்பட்டதால் விரக்தி: தாய் தீக்குளித்து தற்கொலை
மோகனூர் அருகே, மகள் கடத்தப்பட்டதால் விரக்தியடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மோகனூர்,
மோகனூரை அடுத்த அரூர் ஊராட்சி ஆலாம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் வரதராஜூ. இவரது மனைவி கோமதி (வயது 44). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கோமதியின் 17 வயது நிரம்பிய 2-வது மகளை அந்த பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஒருவர் கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த இளம்பெண் மீட்கப்பட்டார்.
இதற்கிடையில் மகள் கடத்தப்பட்ட சம்பவத்தால் விரக்தி அடைந்து காணப்பட்ட கோமதி நேற்று முன்தினம் பகல் 1 மணியளவில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம், பக்கத்தினர் அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 5 மணியளவில் கோமதி இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.