தொழில்நுட்ப கோளாறால் துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை பாதிப்பு பயணிகள் கடும் அவதி
தொழில்நுட்ப கோளாறால் துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மும்பை,
தொழில்நுட்ப கோளாறால் துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
தொழில்நுட்ப கோளாறு
மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் நேற்று காலை பன்வெலில் இருந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. காலை 9.20 மணியளவில் அந்த ரெயில் சிவ்ரி - காட்டன்கிரீன் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த ரெயில் நடுவழியில் நின்றது. அந்த ரெயிலை தொடர்ந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த மற்ற ரெயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. அனைவரும் வேலைக்கு செல்லும் காலை நேரம் என்பதால் ரெயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.
பயணிகள் அவதி
நடுவழியில் நின்ற ரெயில்களில் இருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இதற்கிடையே தகவல் அறிந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் வரையிலும் ரெயில்கள் நகராததால் எரிச்சல் அடைந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடையை கட்டினர். பின்னர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஆட்டோ, டாக்சி மற்றும் பஸ்களில் சென்றனர்.
இந்த நிலையில் கோளாறு சரி செய்யப்பட்டு 10 மணியளவில் மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது. அதன்பின்னர் ரெயில்கள் 1 மணி நேரம் வரையிலும் தாமதமாக இயங்கின.