சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, விசைத்தறி தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விசைத்தறி தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் சம்பத்(வயது 59). விசைத்தறி தொழிலாளி. கடந்த 28-10-2018 அன்று சம்பத் வீட்டில் இருந்தபோது தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் சிறுமி அழுதபடி வீட்டில் இருந்து வெளியே வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினாள். இதை கேட்ட பெற்றோர் சம்பத்திடம் கேட்ட போது அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காங்கேயம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பத்தை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றம் சாட்டப்பட்ட சம்பத்துக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.