கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் கறிக்கோழி விற்பனை பாதிப்பு - பண்ணையாளர்கள் கவலை

கேரளாவில் பெய்து வரும் தொடர்மழையால் கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2019-07-10 22:30 GMT
காமநாயக்கன்பாளையம்,

திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம், அனுப்பட்டி, புளியம்பட்டி, பருவாய், காட்டூர்,கேத்தனூர், வாவிபாளையம் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதில் கேரளாவிற்கு மட்டும் தினசரி 3 லட்சம் கிலோ கறிக்கோழி விற்பனைக்கு அனுப்பபடுகிறது. கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை சீராக இருந்து வந்தது. கடந்த ஜூன் மாதம் கிலோ ரூ.88 ஆக இருந்தது. தற்பொழுது கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருவதால் கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளது. இதனால் இங்கு கறிக்கோழிகள் தேக்கமடைந்துள்ளது. கறிக்கோழி விலை படிப்படியாக குறைந்து தற்போது கிலோ ரூ.78 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:-

தினசரி 10 லட்சம் கறிக்கோழிக்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் கேரளாவிற்கு மட்டும் தினசரி 3 லட்சம் கிலோ கறிக்கோழி விற்பனைக்கு அனுப்பபடுகிறது. இந்நிலையில் கேரளாவில் மழை பெய்து வருவதால் கறிக்கோழி விற்பனை குறைந்துள்ளது. மேலும் மழை பெய்து வருவதால் வாகனங்களில் கறிக்கோழிகளை அனுப்பினால் மழையில் நனைந்து கொண்டே செல்வதால் அதிகமான கோழிகள் இறந்து ந‌‌ஷ்டம் ஏற்படுகிறது. இந்நிலையில் கேரளாவில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக நம் பகுதிகளிலும் சாரல்மழை பெய்து வருவதால் தட்பவெப்ப சூழ்நிலை மாறி மிதமான வெப்பம் நிலவுவதால் கறிக்கோழிகள் நன்கு வளர்ந்து விடுகின்றன.

ஒரு கறிக்கோழிக்குஞ்சு 50 நாட்கள் வளர்ந்து 2 கிலோ எடை வரும். ஆனால் தற்பொழுது மிதமான தட்பவெப்ப சூழ்நிலையால் 40 நாட்களில் 2 கிலோ எடைக்கு வளர்ந்துவிடுகிறது. இதனால் கறிக்கோழிகள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது ஒரு பக்கம் விற்பனை பாதிப்பு மறு பக்கம் உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டு, விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கறிக்கோழி பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்த கறிக்கோழி தேக்கமடைந்துள்ளது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இதே போல கறிக்கோழிகள் தேக்க நிலை நீடித்தால் கறிக்கோழி உற்பத்தி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்