நெல்லை மாவட்டத்தில் 167 கிராமங்களில் நீர் மேலாண்மை திட்டம் கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் 167 கிராமங்களில் மத்திய அரசின் நீர் மேலாண்மை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

Update: 2019-07-10 22:00 GMT
நெல்லை,

மத்திய அரசு ‘ஜல் சக்தி அபியான்‘ என்ற நீர் மேலாண்மை திட்டத்தை கடந்த 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி வரை தென் மேற்கு பருவ மழை காலத்தை முதல் பகுதியாகவும், அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை வடகிழக்கு பருவ மழை காலத்தை 2-வது பகுதியாகவும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூடுதல் வளர்ச்சி ஆணையர் சந்தானு மித்ரா தலைமையில் 11 பேர் கொண்ட மத்திய அரசின் உயர் நிலை அதிகாரிகள் குழு நெல்லை மாவட்டத்தில் 5 நாட்கள் ஆய்வு நடத்துகிறது.

இதுதொடர்பான ஆய்வு கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக நீர் வள மேலாண்மை மற்றும் மழை நீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்துவது ஆகும். நெல்லை மாவட்டத்தில் நீர்வளம் குறைவான மற்றும் மிகவும் வறட்சியான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 22 வருவாய் குறு வட்டங்களில் அடங்கி உள்ள 3 நகராட்சிகள், 6 நகர பஞ்சாயத்துகள் மற்றும் 12 யூனியன்களை சேர்ந்த 167 கிராம பஞ்சாயத்துகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நீர்வள மேலாண்மை மற்றும் மழை நீர் சேகரிப்பு திட்டம், நீர்நிலைகள் மற்றும் குளங்களை புதுப்பித்தல், ஆழ்குழாய் கிணறுகளை மறு பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், தீவிர காடு வளர்ப்பு பணிகள் ஆகிய பணிகள் இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நெல்லை மாவட்டத்தில் மத்திய குழுவால் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மத்திய குழு அதிகாரிகள், மாவட்ட வன அலுவலர் திருமால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்