கொழும்பில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.17½ லட்சம் தங்கம் பறிமுதல்

கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.17½ லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-07-10 22:45 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்துவரும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த கீதா (வயது 44) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

பின்னர் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் 4 தங்க சங்கிலிகள், 3 பிரேஸ்லெட்டுகள், 2 தங்க வளையல்கள், ஒரு துண்டு தங்கம், 3 டாலர்கள் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.17 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 515 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர், அந்த தங்கத்தை யாருக்காக கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? என பிடிபட்ட இலங்கை பெண் கீதாவிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்