பழனியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை அகற்ற எதிர்ப்பு, போலீசார்- பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு

பழனியில், தெருப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-09 22:45 GMT
பழனி,

பழனி நகராட்சி 20-வது வார்டில் அம்பலக்காரர் தெரு உள்ளது. இந்த பகுதியில் பல்வேறு சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை அங்குள்ள தெருப்பகுதியில் திடீரென விநாயகர் கோவில் ஒன்றை அப்பகுதி மக்கள் கட்டினர். இதையடுத்து தெருப்பகுதியை ஆக்கிரமித்து கோவில் கட்டிடம் கட்டப்படுவதாக நகராட்சிக்கு புகார் தெரிவிக் கப்பட்டது.

இதையடுத்து பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் தெருவில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற முயன்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே பொதுமக்களுக்கும்-போலீசாருக்கும் இடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த கார்த்திகா, சிவகாமி ஆகியோர் கோவில் கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் கோவிலை அகற்ற தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றனர்.

இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நகராட்சி ஆணையர் நாராயணன், தாசில்தார் பழனிச்சாமி தலைமையிலான அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவது சட்டத்துக்கு புறம்பானது. எனவே கோவில் கட்டிடம் கட்டக்கூடாது என தெரிவித்தனர்.

இதற்கு அப்பகுதி மக்கள், எங்கள் பகுதியில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றம் சாட்டினர். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சமாதானம் ஆகினர். பின்னர் நகராட்சி ஊழியர்கள் கோவில் கட்டிடத்தை இடித்து அகற்றினர். இந்த சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்