ஆம்பூரில், பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற மாணவி கீழே விழுந்து சாவு
ஆம்பூரில் ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவி தவறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தாள்.
ஆம்பூர்,
ஆம்பூர் மளிகைதோப்பு பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு திவ்யதர்ஷினி (வயது 7) என்ற மகளும், லோகேஷ் (5) என்ற மகனும் உள்ளனர். திவ்யதர்ஷினி 2-ம் வகுப்பும், லோகேஷ் 1-ம் வகுப்பும் ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள இந்து ஆரம்பப் பள்ளியில் படித்து வந்தனர். அப்பகுதி மாணவர்கள் 15 பேர் ஒரு ஷேர் ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு செல்வது வழக்கம்.
நேற்று காலை வழக்கம் போல திவ்யதர்ஷினி மற்றும் லோகேசும் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றனர். ஒரே ஆட்டோவில் 15 பேர் செல்வதால் இடநெருக்கடியால் திவ்யதர்ஷனி ஆட்டோவின் முன்பக்கத்தில் அமர்ந்து சென்றுள்ளாள்.
ஆம்பூர் நகராட்சியில் குடிநீர் பணி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அவ்வாறு மோசமான சாலையில் ஆட்டோ வந்தபோது மாணவி திவ்யதர்ஷினி திடீரென ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தாள். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யதர்ஷினி பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்ல ஆட்டோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரே ஆட்டோவில் 10-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றி செல்வதால் இதுபோன்ற விபத்துகள் நடக்கிறது. இதனை தடுக்க கல்வித்துறையும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.