செல்போன் திருடனை பிடிப்பதற்காக ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பயணி சாவு
தன்னிடம் செல்போன் பறித்த திருடனை பிடிப்பதற்காக ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பயணி ரெயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
மும்பை,
தன்னிடம் செல்போன் பறித்த திருடனை பிடிப்பதற்காக ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பயணி ரெயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
செல்போன் பறிப்பு
மும்பை கோரேகாவை சேர்ந்தவர் சேக் கபர் சேக் (வயது53). இவர் தென்மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை தன்னுடன் டிரைவர்களாக வேலை பார்க்கும் நண்பர்கள் இருவருடன் சர்ச்கேட் நோக்கி மின்சார ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் வாசற்படி அருகே நின்று கொண்டிருந்தனர். ரெயில் சர்னிரோடு ரெயில் நிலையத்தில் நின்று விட்டு புறப்பட்ட போது, சேக் கபர் சேக்கின் அருகில் நின்ற ஒருவர் திடீரென அவரது கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு பிளாட்பாரத்தில் குதித்து ஓட்டம் பிடித்தார்.
ரெயில் சக்கரத்தில் சிக்கினார்
இதனால் அதிர்ச்சி அடைந்த சேக் கபர் சேக் அவரை பிடிக்கும் முயற்சியில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தார். துரதிருஷ்டவசமாக ரெயில் அப்போது பிளாட்பாரத்தை கடந்து சென்றது. இதனால் கீழே விழுந்த சேக் கபர் சேக் ரெயில் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
இதைப்பார்த்து பதறிப்போன அவரது நண்பர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரெயில் மெரின்லைன் ரெயில் நிலையத்தில் நின்றது. சம்பவம் குறித்து அவரது நண்பர்கள் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சாவு
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேக் கபர் சேக்கை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக் கபர் சேக்கின் சாவுக்கு காரணமான செல்போன் திருடனை வலைவீசி தேடி வருகின்றனர்.
செல்போன் திருடனை பிடிக்க முயன்று ஓடும் ரெயிலில் இருந்து சேக் கபர் சேக் விழும் காட்சிகள் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. இந்த காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.