கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த 7 பேர் மீது வெடிகுண்டு வீச்சு 5 பேர் கைது

திருவள்ளூர் அருகே கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்த 7 பேர் மீது வெடிகுண்டு வீசியது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-07-09 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மேல்மனம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு தங்கராஜ் அந்த பகுதியில் நடைபயிற்சி சென்ற போது அவரை சுற்றி வளைத்த ராஜேஷ் தரப்பினர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இது தொடர்பாக வெள்ளவேடு போலீசார் ராஜேஷ் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட தங்கராஜின் சகோதரரும், செங்கல் சூளை அதிபருமான மேல்மனம்பேடு முத்து நகரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவருக்கும் ராஜேஷுக்கும் இடையே இந்த கொலை தொடர்பாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 26-9-2018 அன்று வெங்கட்ராமன் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ராஜேஷ் தரப்பினர் அவரை வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

இந்த வழக்கில் வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், தினேஷ், வீரா, இளங்கோ, கவிக்குமார் என 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோ தருமன், ஸ்டீபன், கவிக்குமார் உள்பட 7 பேர் ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்கள் 7 பேரும் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தருமன் உள்பட 7 பேர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்தார்கள். மேல்மனம்மேடு கிராமத்தில் அருகே வந்து கொண்டிருந்த போது அவர்களை சுற்றிவளைத்து அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் தருமன் படுகாயம் அடைந்தார்.

மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். படுகாயம் அடைந்த தருமனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டு வீசியதாக மேல்மனம்பேட்டை சேர்ந்த சதீஷ் என்கிற டப்பா சதீஷ் (வயது 24 ), மற்றொரு சதீஷ் என்ற சார்பு சதீஷ் (27), இமான் (24 ), ராமச்சந்திரன் (38), கலையரசன் (20 ) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்