கடும் வறட்சியால் உணவு தேடி தமிழகத்தில் இருந்து கேரள வனப்பகுதிக்கு இடம்பெயரும் யானைகள்

கடும் வறட்சியால் உணவு தேடி தமிழகத்தில் இருந்து கேரள வனப்பகுதிக்கு காட்டு யானைகள் இடம் பெயருகின்றன.

Update: 2019-07-09 22:45 GMT
தளி,

வனப்பகுதியை வாழ்விடமாக கொண்டது யானைகள். பரந்து விரிந்த காடுகளில் குடும்பம் குடும்பமாக வலம் வருகின்றன. அதன் சாணத்தின் மூலமாக தாவரங்களின் விதைகள் பல்வேறு இடங்களில் விதைக்கப்பட்டு மரக்கன்றுகள் வளர்கின்றன. இதனால் அடர் வனப்பகுதி உருவாவதற்கும் ஏற்கனவே உள்ள வனம் செழுமை அடையவும் யானைகளின் பங்கு அவசியமாகும். யானைகளால் சேதப்படும் மரம், செடி மற்றும் புற்கள் தாவர உண்ணிகளுக்கு உணவாகிறது. மான், காட்டெருமை உள்ளிட்ட தாவர உண்ணிகளின் வளர்ச்சியால் புலி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட மாமிச உண்ணிகளின் உணவுத்தேவையும் பூர்த்தியாகிறது.

வனப்பகுதியில் ஓடும் ஆறுகள், ஓடைகள் வனவிலங்குகளின் அட்சய பாத்திரமாகும். அவற்றில் நீர்வரத்து குறைந்து வறட்சி ஏற்பட்டால் யானைகள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும். இதனால் மற்ற தாவர உண்ணிகளுக்கு தேவையான உணவும் கிடைக்காது. அதேபோன்று மாமிச உண்ணிகளும் உணவுக்காக தாவர உண்ணிகளை தேடிக்கொண்டு அடிவாரப்பகுதிக்கு வந்து விடுகின்றன. யானைகள் வனப்பகுதியில் இல்லையேல் மற்ற வனவிலங்குகளின் உணவுச்சங்கிலி அறுபட்டுவிடும். இதனால் யானைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்க வேண்டியது நமது கடமையாகும்.

கடந்த சில வருடங்களாக வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை இழந்து தவித்து வருகின்றன. அவ்வப்போது மழை பெய்தாலும் ஆறுகளில் பெரிதளவில் நீர்வரத்து ஏற்படுவதில்லை. அப்படியே ஏற்பட்டாலும் குறுகிய காலத்திற்குள் வறட்சி ஏற்படுகிறது. இதனால் வனப்பகுதியில் தாவரங்கள் துளிர்விடுவதும் பின்பு கருகுவதுமாக உள்ளது. இதன் காரணமாக யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றன.

அதை தொடர்ந்து உணவை தேடிக்கொண்டு வனப்பகுதியில் மணிக்கணக்கில் நடந்து வந்து சமதளப்பரப்பை அடைகின்றன. அந்த வகையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் நிலவுகின்ற வறட்சியின் காரணமாக கடந்த சில மாதங்களாக யானை, மான், காட்டெருமை, சிங்கவால்குரங்கு, மற்றும் சிறு உயிரினங்கள் அமராவதி அணைப்பகுதியில் முகாமிட்டு வந்தன. அணைப்பகுதியில் இரவு முழுவதும் உலா வந்து உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டை போன்று பருவமழை தீவிரமடையவில்லை என்றாலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் பசுமைக்கு மாறி வருகின்றன. அங்குள்ள புற்கள், மரங்கள், செடிகள் துளிர்விட்டு வளர்ந்துள்ளன.

இந்த சூழலில் தமிழக வனப்பகுதியில் உணவிற்காக தவித்து வந்த யானைகள் கேரள மாநிலத்தை நோக்கி இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளன. யானைகள் நாளொன்றுக்கு சுமார் 150 கிலோமீட்டர் முதல் 170 கிலோமீட்டர் வரையிலும் உணவைத் தேடி பயணம் செய்யும் திறன் உடையது. எங்கு பசுமை நிறைந்து காணப்படுகிறதோ அங்கு இருப்பிடத்தை அமைத்து உணவுத்தேவையை நிறைவு செய்து கொள்ளும்.

தற்போது கேரள வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் தங்கு தடையின்றி தாராளமாக கிடைப்பதாக தெரிகிறது. இதனால் யானைகள் அங்கு அதிகளவில் முகாமிட்டு வருகின்றன. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தமிழக வனப்பகுதி பசுமைக்கு திரும்பினால் மட்டுமே யானைகள் மீண்டும் தமிழக வனப்பகுதியில் காணமுடியும் என்ற சூழல் நிலவுகிறது. வனவிலங்குகள் மட்டுமல்ல பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்