நில குத்தகை பிரச்சினை: பள்ளிக்கு நில உரிமையாளர் பூட்டு போட்டார் மாணவர்களுடன் பெற்றோர் திரண்டதால் பரபரப்பு

மதுரவாயல் அருகே நில குத்தகை பிரச்சினையால் பள்ளிக்கு நில உரிமையாளர் பூட்டு போட்டதையொட்டி, மாணவர்களும், பெற்றோர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-09 22:15 GMT
பூந்தமல்லி,

மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் தங்களது குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது பள்ளியின் நுழைவாயில் பூட்டு போடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாகியும் பள்ளியின் நுழைவாயில் திறக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பெற்றோர்கள் கேட்டபோது பள்ளி வளாகத்திற்குள் இருந்த சில நபர்கள் பள்ளியை திறக்க முடியாது என்று கூறி உள்ளனர். மேலும் பள்ளி வளாகத்திற்குள் காலி மது பாட்டில்கள் கிடந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் அந்த பள்ளியின் நுழைவாயில் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பள்ளி செயல்பட்டு வரும் நிலத்தின் உரிமையாளரிடம் பள்ளி நிர்வாகம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இயங்கி வந்தது தெரிய வந்தது. தற்போது இந்த நிலத்தில் ஆஸ்பத்திரி கட்ட போவதாக முடி செய்த நிலத்தின் உரிமையாளர் பள்ளியை காலி செய்து தருமாறு நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். இதனால் நில உரிமையாளர் அவரது ஆதரவாளர்களை பள்ளி வளாகத்திற்குள் நேற்று முன்தினம் இரவு அனுப்பி அந்த வளாகத்தை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

இந்நிலையில், போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து, நில உரிமையாளர்களின் ஆதரவாளர்கள் அங்கிருந்து சென்றனர். பின்னர் பள்ளிநிர்வாகத்தை பெற்றோர் முற்றுகையிட்டனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கும்படியும் இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்