திண்டுக்கல் அருகே துணிகரம், அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு - மர்மநபர்கள் கைவரிசை
திண்டுக்கல் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாடிக்கொம்பு,
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி மல்லிகா. இவருடைய தம்பி மகேந்திர பூபதி பக்கத்து வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவர்கள், வீடுகளை பூட்டி விட்டு தேனியில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்று விட்டனர். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் 2 வீடுகளில் இருந்த பீரோக்களை உடைத்து அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை திருடினர்.
அதே தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். பாத்திர வியாபாரியான இவர், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பழனிக்கு சென்று விட்டார். அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து 2 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை திருடினர். அத்துடன் அதே பகுதியை சேர்ந்த மரிவளன் என்பவருடைய வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி மர்மநபர்கள் உள்ளே குதித்துள்ளனர்.
சத்தம் கேட்டு மரிவழன் எழுந்து வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார். இதனைக்கண்ட மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர். இதற்கிடையே தப்பியோடிய மர்மநபர்கள் அழகுசமுத்திரப்பட்டி பிரிவில் வசித்து வரும் குறிசந்திரன் என்பவருடைய வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மொபட்டை திருடி சென்றனர்.
நேற்று காலையில் வீடுகள் திறந்து கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தாடிக்கொம்பு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 3 வீடுகளிலும் பூட்டையும் கடப்பாரை கம்பியால் நெம்பி உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இதையடுத்து கைரேகை பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சீனியம்மாள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் திருட்டு நடந்த வீடுகளில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தார். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது வீடுகளில் இருந்து மோப்பம் பிடித்தபடி தாடிக்கொம்பு மதுபானக் கடை வரை ஓடிபோய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.