கிள்ளையில், சாதி சான்றிதழ் கேட்டு பெற்றோருடன் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

கிள்ளையில், சாதி சான்றிதழ் கேட்டு பெற்றோருடன் பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-08 22:45 GMT
புவனகிரி, 

கிள்ளை அடுத்த பிச்சாவரம் செல்லும் சாலையில் எம்.ஜி.ஆர். நகர், தளபதி மற்றும் சிசி நகர் ஆகிய நகர்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருளர் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் வகையில் எம்.ஜி.ஆர். நகரில் அரசு நடுநிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால், அரசின் சலுகைகள் எதையும் பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதனால் பெற்றோர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் சிதம்பரம் சப்-கலெக்டர் என்று அதிகாரிகள் அனைவரிடமும் சாதி சான்றிதழ் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரைக்கும் இவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதில் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் சேர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு கிள்ளை கடைவீதியில் பிச்சாவரம் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாசில்தார் அரிதாஸ் மற்றும் கிள்ளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விரைவில் மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் அரிதாஸ் உறுதியளித்தார். இதையேற்று அனைவரும் மறியலை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். சுமார் 1½ மணி நேரம் நடந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்