பெங்களூரு அருகே கைதான பயங்கரவாதி வாடகைக்கு வசித்த வீட்டில் பதுக்கிய 10 வெடிகுண்டுகள், வெடிப்பொருட்கள் சிக்கியதால் பரபரப்பு - நாசவேலையில் ஈடுபட சதி திட்டமா?
பெங்களூரு அருகே கைதான பயங்கரவாதி வாடகைக்கு வசித்த வீட்டில் பதுக்கிய 10 வெடிகுண்டுகள், வெடிப்பொருட்கள் சிக்கியது. இது பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட சதி திட்டமா? என்ற பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா டவுன் சிக்பேட்டை பகுதியில் வசித்து வந்த பயங்கரவாதியான ஹபிப்பூர் ரகுமான் (வயது 30) என்பவரை கடந்த மாதம் (ஜூன்) 25-ந் தேதி தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இவர், வங்காளதேசத்தை சேர்ந்த ஜமாத் உல் முஜாகிதீன் வங்காளதேசம் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் கடந்த 2014-ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டம் காக்ராகிராப்பில் உள்ள ஒரு வீட்டில் வெடிகுண்டுகள் வெடித்து சிதறி இருந்தது.
இதில், 2 பேர் உயிர் இழந்ததுடன், ஒருவர் படுகாயம் அடைந்திருந்தார். வெடிகுண்டுகளை தயாரிக்கும் போது, அந்த வெடிகுண்டுகள் வெடித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜமாத் உல் முஜாகிதீன் வங்காளதேசம் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த அமைப்பை சேர்ந்த ஹபிப்பூர் ரகுமான் தொட்டபள்ளாப்புராவில் பதுங்கி இருப்பது பற்றி அறிந்த அதிகாரிகள் கைது செய்திருந்தார்கள்.
கைதான ஹபிப்பூர் ரகுமானிடம் நடத்திய விசாரணையின் போது ராமநகர் மாவட்டம் திப்புநகரில் உள்ள சாக்கடை கால்வாயில் வெடிகுண்டுகளை வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து, மறுநாள் (27-ந் தேதி) திப்புநகரில் உள்ள சாக்கடை கால்வாயில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திய போது அட்டை பெட்டிக்குள் இருந்த 2 வெடிகுண்டுகள் சிக்கியது. அதனை வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் செயலிழக்க செய்தனர். அதன்பிறகு, மேற்கு வங்காளத்தில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக ஹபிப்பூர் ரகுமான், பெங்களூருவில் இருந்து அழைத்து செல்லப்பட்டார்.
இந்த நிலையில், அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையின் போது பெங்களூரு சிக்கபானவரா, எசருகட்டா ரோட்டில் உள்ள பழைய ரெயில் நிலைய ரோட்டில் வாடகைக்கு வசித்த வீட்டில் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக பயங்கரவாதி ஹபிப்பூர் ரகுமான் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து பெங்களூருவுக்கு பயங்கரவாதி ஹபிப்பூர் ரகுமானை தேசிய புலனாய்வு அதிகாரிகள் அழைத்து வந்தனர்.
பின்னர் அவர் கூறியபடி சிக்கபானவராவில் உள்ள ஒரு பழைய வீட்டில் நேற்று முன்தினம் இரவில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் வெடிகுண்டுகள், வெடிப்பொருட்கள், துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது வெடிக்கும் தன்மை கொண்ட 10 வெடிகுண்டுகள், வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காக பயன்படுத்தும் ஏராளமான வெடிப்பொருட்கள் சிக்கியது. உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வெடிகுண்டுகள், வெடிப்பொருட்களை பாதுகாப்புடன் அங்கிருந்து எடுத்து சென்றனர்.
இதற்கிடையில், சிக்கபானவராவில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தொட்டபள்ளாப்புராவுக்கு தனது வீட்டை ஹபிப்பூர் ரகுமான் மாற்றி இருந்தார். அவர் சிக்கபானவராவில் வசிக்கும் போது, அவருடன் பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் சமீபத்தில் வீட்டை காலி செய்துவிட்டு சென்றிருந்ததும் தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியவந்திருந்தது. இதையடுத்து, பீகாரில் ஹபிப்பூர் ரகுமானின் கூட்டாளிகள் 2 பேரையும் ஏற்கனவே அதிகாரிகள் கைது செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிக்கபானவராவில் ஹபிப்பூர் ரகுமான் வசித்து வந்தபோது, தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து வெடிகுண்டுகள் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டதும், அந்த வெடிகுண்டுகள் தான் தற்போது தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை அந்த வீட்டில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அதே நேரத்தில் அந்த வீட்டின் உரிமையாளரான முஸ்தாப் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடமும் ஹபிப்பூர் ரகுமான் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர்.
பயங்கரவாதி தயாரித்து வைத்திருந்த வெடிகுண்டுகள் சிக்கி இருப்பதால், பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டினார்களா?, வேறு ஏதாவது மாநிலத்தில் நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டார்களா?. எதற்காக வெடிகுண்டுகளை தயாரித்தனர்? என்பது தெரியவில்லை. அதுகுறித்து ஹபிப்பூர் ரகுமானிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.