கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரும் நீர் மேலாண்மை திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2019-07-08 22:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மத்திய அரசு நுகர்வோர் மற்றும் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் மஜ்ஹீ தலைமை தாங்கினார். மனிதவள மேம்பாட்டு இயக்குனர் விஜயபாஸ்கர் குராலா, மாவட்ட கலெக்டர் பிரபாகர், விஞ்ஞானிகள் ஆதிரா, மாதவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கூடுதல் செயலாளர் மஜ்ஹீ பேசியாதவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே தண்ணீர் பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அலுவலர்கள் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளிடம் தண்ணீரின் அவசியம் குறித்தும், பல்வேறு போட்டிகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாவட்டத்தில் துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மத்திய குழுவினர் கேட்டறிந்தனர். இதையடுத்து நீர் மேலாண்மை திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். பர்கூர் ஒன்றியம் கெம்பிநாயனப்பள்ளி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இங்கு மரங்களுக்கு அருகில் தண்ணீர் சேமிக்கும் வகையில் 2 ஆயிரம் குழிகள் அமைக்கும் பணிகள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதே போல், சிந்தகம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புங்கன், வேம்பு உள்ளிட்ட 50 மரக்கன்றுகள் நடும் பணிகள், ஓதிகுப்பம் கிராமத்தில் குளத்தின் கரைகளை புனரமைக்கும் பணிகள், புதிய தடுப்பணைகள், வீடுகளில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

சிந்தகம்பள்ளி பகுதியில் பழங்காலத்தில் இருந்த குட்டை மூடப்பட்டுள்ளதாகவும், அதனை தூர்வாரி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்திய கூடுதல் செயலாளர், குட்டையை தூர்வாரி தர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றார். இந்த ஆய்வின் போது அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்