சத்திரரெட்டியப்பட்டி கண்மாயை தூர்வார அனுமதிக்க வேண்டும்; கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

சத்திரரெட்டியப்பட்டி கிராம கண்மாயை தூர்வார அனுமதி வழங்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2019-07-08 22:30 GMT
விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியப்பட்டி கண்மாயை தூர்வார பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டு கண்மாயில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் பெரும் அளவில் நஷ்டம் அடைந்தனர். கிணற்று பாசனம் செய்த விவசாயிகளுக்கு மட்டும் ஓரளவு நெல் அறுவடை செய்ய வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் கிராம கண்மாயை தூர்வார முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி தனியார் துறைக்கு எல்லா உதவிகளும் மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால் எங்கள் ஊர் கண்மாயை தூர்வார, இருவழி ரெயில்பாதை திட்டப்பணி செய்து வரும் ஒப்பந்ததாரருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்தநிலையில் எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலர் தாசில்தாருக்கு தவறான தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் கண்மாயை தூர்வாருவதற்கான அனுமதி தடை செய்யப்பட்டது. இதனால் தூர்வாரும் பணி தொடங்கியவுடன் நிறுத்தப்பட்டு விட்டது.

கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி கண்மாயை தூர்வாரி மழைநீரை சேகரித்து விவசாயம் செய்யவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கண்மாயை தூர்வாருவதற்கு அனுமதி வழங்க வேண்டும். தவறான தகவல் தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கண்மாயை தூர்வாருவதற்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்