கிருஷ்ணகிரியில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2019-07-08 22:00 GMT
கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு முழுவதும் 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து வரும் செயலாளர்களை தமிழக அரசு பொதுப்பணி நிலைத்திறன் அடிப்படையில் மாவட்ட அளவில் பணியிட மாற்றம் செய்யும் வகையில் அரசு ஆணை வழங்கி, செயலாளர்களை பணியிட மாற்றம் செய்திட நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் செயலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும், சங்கத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு வழங்கிட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் சார்பில் பழையபேட்டை காந்தி சிலை அருகில் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட துணைத் தலைவர்கள் முருகேசன், பழனி, மாவட்ட இணை செயலாளர்கள் தனலட்சுமி, சங்கீதா உள்பட ஒன்றிய நிர்வாகிகள், பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில், மாவட்ட பொருளாளர் ராஜதுரை நன்றி கூறினார்.

தொடர்ந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் பிற அலுவலக பணியாளர்கள் சுமார் 10 முதல் 20 ஆண்டுகள் பணிபுரிந்து பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லாமல் பணியாற்றி வருகின்றனர். பொதுப்பணி நிலைத்திறனை அமல்படுத்தினால் முற்றிலும் பதவி உயர்வுகள் பாதிக்கும் நிலை உள்ளது.

செயலாளர் பணியிட மாற்றத்தால் ஏற்படும் தொய்வு, சங்கங்களை மேலும் நலிவடைய செய்வதோடு, பணியாளர்கள் சம்பளம் பெற முடியாத சூழ்நிலையுடன் பணியிழப்பை சந்திக்ககூடிய பேராபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. சங்கங்களில் பணிபுரியும் செயலாளர்களின் சம்பள விகிதம் சங்கத்திற்கு சங்கம் வேறுபாடு உடையதாகவும், கடும் ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாகவும் இருந்து வருகிறது.

இதற்கு தீர்வு காணாமல் செயலாளர்களை பணியிட மாறுதல் செய்யப்பட்டால் பணியாளர்கள் மத்தியில் கடும் விரக்தியையும், தொய்வினையும் ஏற்படுத்தும். எனவே, தமிழக முதல்-அமைச்சர், எங்கள் கோரிக்கையினை ஏற்று, செயலாளர் இடமாறுதல் செய்வதை மீண்டும் பரிசீலனை செய்து, நிறுத்தி வைக்க கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்