சோளிங்கர், ஜோலார்பேட்டை பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சோளிங்கர், ஜோலார்பேட்டை பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சோளிங்கர்,
சோளிங்கர் ஒன்றியம் ரெண்டாடி ஊராட்சியில் உள்ள ஏரிமுன்னூர் கிராமத்தில் கடந்த 1 மாதமாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் இந்த பிரச்சினையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் மறியல் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கை குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை போனில் தொடர்பு கொண்டு கூறினர். இதனையடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு சந்தைகோடியூர் பகுதியில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், பாதர் கெசு தெருவில் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இருப்பினும் அவர்கள் நகராட்சி அதிகாரிகள் வந்து உறுதி அளித்தால் மட்டுமே நாங்கள் கலைந்து செல்வோம் என தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து நகராட்சி மேலாளர் நிஷாத்பேகம், கணக்காளர் இளவரசன் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம், நாளை (அதாவது இன்று) முதல் குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.