போலீசாரை பழிவாங்குவதற்காக வெடிகுண்டு பீதி கிளப்பியவர் பிடிபட்டார்

போலீசாரை பழிவாங்க மும்பையில் வெடிகுண்டு பீதியை கிளப்பியவரை போலீசார் கைது செய்தனர். இவர் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.

Update: 2019-07-07 22:00 GMT
மும்பை,

மும்பை ஜே.ஜே. மார்க் போலீஸ் நிலையத்திற்கு சம்பவத்தன்று போனில் அழைப்பு ஒன்று வந்தது. இதில் பேசிய ஆசாமி சிராபஜாரில் நிற்கும் சிவப்பு நிற காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்க இருப்பதாகவும் கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கு சென்று காரில் சோதனை நடத்தினர். ஆனால் இந்த சோதனையில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பைதோனியை சேர்ந்த ரசாக் சேக் என்பவர் தான் வெடிகுண்டு பீதியை கிளப்பியது தெரியவந்தது.

மேலும் அவர் குஜராத் மாநிலம் ஆமதாபாத் பைசல் நகரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையத்தில் 15 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக போலீசார் அவரை தேடி வந்து உள்ளனர். இதனால் ரசாக் சேக் போலீசாரிடம் சிக்காமல் இருக்க தனது குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்து வந்து உள்ளார்.

இதனால் போலீசாரை பழிவாங்க வேண்டுமென்ற திட்டத்துடன் மும்பையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு சுமார் நூறு தடவைக்கு மேல் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பீதியை கிளப்பி வந்தது தெரியவந்தது. 

மேலும் செய்திகள்