தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்களில், தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு

தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்களில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2019-07-07 23:00 GMT
சத்திரப்பட்டி, 

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் சத்திரப்பட்டி, விருப்பாச்சி, புதுக்கோட்டை, வேலூர், வீரலப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, பெரியகோட்டை, வடகாடு மலைப்பகுதிகள் மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, கொத்தயம், 16 புதூர், கள்ளிமந்தயம் ஆகிய பகுதியில் ஏராளமான விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் தேங்காய்கள் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் உரிக்கப்பட்டு, பின்னர் விற்பனைக்காக பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சந்தைகளுக்கு போதிய தேங்காய் வரத்து இல்லாமல் உள்ளது. அதேவேளையில் அதன் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு டன் தேங்காய் ரூ.22 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ஒரு டன் தேங்காய் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.19 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. பொதுவாக சந்தைகளில் ஒரு பொருளின் விளைச்சல் குறைந்தால் அதன் விலை ஏறுமுகமாக இருக்கும். ஆனால் தற்போது தேங்காய் விளைச்சல் குறைந்துள்ள நிலையில், அதன் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஏற்கனவே தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களுக்கு கூலி, தேங்காய்களை லாரிகளில் ஏற்றி, இறக்க என தனித்தனி கூலிகள் உள்ளன. இதையெல்லாம் போக விவசாயிகளுக்கு சொற்ப லாபம் மட்டுமே கிடைக்கும். ஆனால் தற்போது தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும் செய்திகள்