ஏ.எப்.டி., சுதேசி-பாரதி மில்களின் தொழிலாளர்களுக்கு பட்ஜெட்டில் லே-ஆப் சம்பளம் வழங்க நிதி ஒதுக்கப்படும் - நாராயணசாமி தகவல்

புதுவை ஏ.எப்.டி., சுதேசி-பாரதி மில்களின் தொழிலாளர்களுக்கு இந்த பட்ஜெட்டில் லே-ஆப் சம்பளம் வழங்க நிதி ஒதுக்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-08 00:00 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி மாநில தி.மு.க. வடக்கு பகுதி அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் ஏ.எப்.டி., சுதேசி-பாரதி மில்களை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டுமென வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்று மில்களை புனரமைத்தலில் உள்ள சாதக, பாதக நிலையை தெரிவித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

கடந்த பட்ஜெட்டில் ஏ.எப்.டி. மற்றும் சுதேசி-பாரதி மில்களின் தொழிலாளர்களுக்கு லே-ஆப் சம்பளம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதியை வழங்கவிடாமல் கவர்னர் கிரண்பெடி முட்டுக்கட்டை போட்டார். இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த பட்ஜெட்டில் தொழிலாளர்களுக்கு லே-ஆப் சம்பளம் வழங்க நிதி ஒதுக்கப்படும். ஏ.எப்.டி. நிலத்தின் ஒருபகுதியை விற்பனை செய்து வங்கி கடனை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவும், திருப்பூர் மில் உரிமையாளர்களை புதுவையில் ஆயத்த பணிகளை மேற்கொள்ள அழைக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் புனரமைத்து மீண்டும் இயக்குவது தொடர்பாக தனியாக குழு அமைக்க வேண்டும். பின்னர் அந்த குழுவினர் மத்திய உள்துறை மந்திரி, நிதி மந்திரி, ஜவுளி மந்திரியை சந்தித்து நிதியை பெற நடவடிக்கை எடுப்பதுடன் ஜவுளி பூங்கா அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நடந்த இந்த கூட்டத்தில் புதுச்சேரியில் உள்ள ஏ.எப்.டி., சுதேசி, பாரதி மில்களை புனரமைத்து செயல்படுத்தினால் 25 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்க முடியும். இந்த மில்களை மீண்டும் இயக்குவதால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்யப்படும். எனவே புதுவை அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்