விழுப்புரத்தில், ஓய்வுபெற்ற தாசில்தார் மனைவியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற தாசில்தார் மனைவியை தாக்கி, 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-07 22:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணன்(வயது 65). ஓய்வுபெற்ற தாசில்தார். இவரது மனைவி அனுசுயா(58). இவர் நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பததற்காக வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென அனுசுயாவை வழிமறித்து, அவரிடம் இருந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அனுசுயா திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள 2 பேரும் அனுசுயாவை தாக்கி, அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

இதற்கிடையே அனுசுயாவின் சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தப்பிச் சென்ற மர்மநபர்களை தேடினர். அதற்குள் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து அனுசுயா விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்