ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இணையதளம் வழியாக இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 2 மையங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணி நிரவல், மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு திருவண்ணாமலை டேனிஷ் மிஷின் டவுன் தொடக்கப்பள்ளியிலும், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணி நிரவல், மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.
பதவி வாரியாக நடைபெற உள்ள பணி நிரவல், மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுக்கு சார்ந்த ஆசிரியர்கள் குறிப்பிட்ட தேதியன்று காலை 9 மணிக்கு மையத்திற்கு வருகைபுரிய வேண்டும்.
தொடக்கக் கல்வித்துறையை பொறுத்தவரையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 28 பேர், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 175 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 167 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 464 பேர் என பணியிட மாறுதல் கோரி விண்ணப்பங்கள் அளித்து உள்ளனர்.
பள்ளி கல்வி துறையை பொறுத்தவரையில் பணியிட மாறுதல் கோரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 12 பேர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 13 பேர், முதுகலை ஆசிரியர்கள் 257 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 515 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 15 பேர், உடற்கல்வி ஆசிரியர்கள் 19 பேர், சிறப்பாசிரியர்கள் 8 பேர், கணினி பயிற்றுநர்கள் 11 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.