வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனுக்கு நாய் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டது டாக்டர்கள் தகவல்

திருப்பதியில் மீட்கப்பட்ட சமூக ஆர்வலர் முகிலனை ஒருவாரத்துக்கு முன்பு நாய் கடித்துள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவ பரிசோதனையில் நாய்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Update: 2019-07-07 22:45 GMT
வேலூர்,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணு உலை ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தியவரும், சமூக ஆர்வலருமான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி திடீரென மாயமானார். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயிலில் சென்றபோது அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பிப்ரவரி 18-ந் தேதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. முகிலனை கண்டுபிடிக்கக்கோரிய வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் முகிலனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுமார் 142 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர் ரோந்து சென்றபோது அங்கு நின்ற ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது அவர் மாயமான முகிலன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள், தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தமிழக போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் திருப்பதி ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் ரெயிலில் முகிலனை இரவு 10.30 மணியளவில் காட்பாடிக்கு பலத்த காவலுடன் அழைத்து வந்தனர். இங்கு அவரை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து வேலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் வஜ்ரவேலு தலைமையிலான போலீசார் முகிலனை மருத்துவ பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவருடைய காலில் காயங்கள் காணப்பட்டன. இதுகுறித்து அவரிடம் டாக்டர்கள் கேட்டதற்கு, ஒருவாரத்துக்கு முன்பு நாய் கடித்ததாகவும், அதற்கு எவ்வித சிகிச்சையும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவருக்கு நாய் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டது. முகிலனுக்கு தொடர்ந்து சில நாட்கள் நாய் கடிக்கான ஊசி போட வேண்டும் என்று போலீசாரிடம், டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

முகிலன் சரியாக சாப்பிடாததால் அவர் சோர்வாகவும், உடல் பலவீனமாக காணப்பட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அதிகாலை 2 மணியளவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முகிலனை காரில் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்