20 ஆண்டுகளாக அலைக்கழிப்பு: 80 வயது மூதாட்டிக்கு 12 வாரத்தில் ஓய்வூதியம் – பணப்பலன்களை வழங்க வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பணப்பலன்களை வழங்காமல் 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்ட 80 வயது மூதாட்டிக்கு ஓய்வூதியத்தை 12 வாரத்தில் வழங்க அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த பேச்சியம்மாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
நான் கடந்த 1968–ம் ஆண்டு ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ‘நடத்தாட்டி‘ பணியில் சேர்ந்தேன். 36 ஆண்டுகள் அந்த பள்ளியில் துப்புரவு பணி, குடிநீர் ஏற்பாடு செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தேன். 1995–ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். ஆனால் எனக்கு உரிய ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து எனக்கு ஓய்வூதியம் வழங்கும்படி நெல்லை மாவட்ட கலெக்டரிடம் 1997–ம் ஆண்டு மனு அளித்தேன். பலமுறை மனு அளித்தும் ஓய்வூதியம் வழங்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 2010–ம் ஆண்டு எனது மனுவை நிராகரித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். எனக்கு தகுதி இருந்தும் ஓய்வூதியம் வழங்க அதிகாரிகள் மறுத்த உத்தரவை ரத்து செய்துவிட்டு, கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு சேர வேண்டிய பணப்பலன்கள், ஓய்வூதியத்தை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரருக்கு தற்போது 80 வயதுக்கு மேல் ஆகி விட்டது. தனிமையில் வசிக்கும் அவர், தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் தவிக்கிறார். பல ஆண்டுகளாக ராதாபுரம் பள்ளியில் பணி ஆற்றியுள்ளார். எனவே ஓய்வூதியம் பெற அவர் தகுதியானவர். ஆனால் அவர் ராஜினாமா செய்தது போல போலி கடிதம் தயாரித்து, ஓய்வூதியத்தை வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர். இது சட்ட விரோதமாகும். அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றினாலே ஓய்வூதியம் பெற தகுதி உண்டு என தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் கூறுகின்றன. அந்த அடிப்படையில் மனுதாரருக்கு சேர வேண்டிய பணபலன்கள், ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும்“ என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், ஊராட்சி பள்ளியில் மனுதாரர் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது பணி தொடர்பான ஆவணங்கள் மாயமாகியுள்ளன. ஓய்வூதியம் பெற மனுதாரருக்கு தகுதி உள்ளது. எனவே அவர் ஓய்வு பெற்ற 1995–ம் ஆண்டு முதல் உரிய பணப்பலன்கள், ஓய்வூதியத்தை 12 வாரத்தில் வழங்க வேண்டும். அவருக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, என்று நீதிபதி உத்தரவிட்டார்.