தூத்துக்குடியில் ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்தவர் சாவு

தூத்துக்குடியில் ரகளையில் ஈடுபட்டதால், பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2019-07-06 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே உள்ள கே.வி.கே.சாமி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 36). இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தாராம். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் சென்ற பொதுமக்களை தாக்கி ரகளையில் ஈடுபட்டார். அப்போது அவர் சிலரை கல்லால் அடித்தும், சிலரை கடித்தும் வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாலமுருகனை தாக்கினர்.

இதற்கிடையே பாலமுருகன் அந்த பகுதியில் உள்ள ஒரு சுவரில் ஏறி குதித்தாராம். அப்போது அந்த சுவரில் இருந்த கண்ணாடி துண்டுகள் பாலமுருகனின் உடலில் கிழித்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது அங்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவரையும் பாலமுருகன் தாக்கினார். மேலும் ஆம்புலன்சு கண்ணாடியையும் உடைத்துள்ளார்.

இதனையடுத்து மற்றொரு ஆம்புலன்சு மூலம் பாலமுருகனை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்