“அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது” ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

“அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது” என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Update: 2019-07-06 23:30 GMT
தென்காசி, 

தென்காசியில் நேற்று நடந்த அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணையும் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தென்காசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதை பார்க்கும் போது அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என்பது தெளிவாகிறது. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்குவதற்கு அச்சாரமிட்டு பிள்ளையார்சுழி போட்டது இந்த நெல்லை மாவட்டம் தான். 45 ஆண்டுகளாகியும் அ.தி.மு.க.வானது எக்கு கோட்டை போல் திகழ்கிறது.

பெரியார் சீர்திருத்த கொள்கையை கொண்டு வந்தார். அண்ணா தமிழ் சமுதாயத்திற்கு வாழ்ந்தார். எம்.ஜி.ஆர். ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தார். ஜெயலலிதா அன்பு, ஆற்றல், அறிவு ஆகியவற்றை கொண்டு கட்சியை வளர்த்தார். இந்த இயக்கமானது தொண்டர்களின் ரத்தத்தாலும் வியர்வையாலும் வளர்ந்தது. எம்.ஜி.ஆர். மறைந்தபோது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். ஆனால் ஜெயலலிதாவின் முயற்சியால் 1½ கோடி தொண்டர்கள் அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளனர். பெரிய கட்சியான அ.தி.மு.க. மக்களுக்காக உருவாக்கப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தொண்டர்கள் வரக்கூடிய தேர்தலில் வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தென்காசியில் நடந்த விழா ஆரம்பம் தான். இனி எல்லா மாவட்டங்களில் இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படும். தொண்டர்களால் நாங்கள், தொண்டர்களுக்காக நாங்கள். தொண்டர்களை தேடி நாங்கள் செல்வோம். எந்த கட்சியில் இல்லாத அளவுக்கு நெல்லை மாவட்டத்தில் அ.ம.மு.க. கூடாரம் காலியாகிவிட்டது. அ.தி.மு.க.வில் மட்டுமே தொண்டர் கூட முதல்-அமைச்சராக முடியும். வேறு எந்த கட்சியிலும் முடியாது. தொடர்ந்து மக்களுக்கான அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சியில் உள்ளவர்கள் மனசாட்சியுடன் நன்றியுடன் செல்பட்டு வருகிறார்கள். இப்போது இணைந்தவர்களுக்கு எந்த பாகுபாடும் பார்ப்பது கிடையாது. அவர்களுக்கு தேவையான எல்லா பணிகளும் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்