அனைத்து அமைச்சு பணியாளர்களுக்கும் நிர்வாகம், பணி குறித்த பயிற்சி வழங்க வேண்டும்
அனைத்து அமைச்சு பணியாளர்களுக்கும் நிர்வாகம் மற்றும் பணி குறித்த பயிற்சி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
நாமக்கல்,
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பகவதியப்பன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் சுந்தரேசன் வரவேற்று பேசினார். இதில், பொது சுகாதாரத்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் பதவி உயர்வுக்கு தமிழ்நாடு மருத்துவ விதித்தொகுப்பு துறை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கண்காணிப்பாளர் பணியிடம் இல்லாத 88 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கண்காணிப்பாளர் பணியிடங்களை ஏற்படுத்தி தர வேண்டும்.
அனைத்து அமைச்சு பணியாளர்களுக்கும் சென்னை மற்றும் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் மூலம் நிர்வாகம் மற்றும் பணி குறித்த பயிற்சி வழங்கப்பட வேண்டும். பொது சுகாதாரத்துறையில் கீழ் செயல்பட்டு வரும் திட்டங்களுக்கு மண்டல தணிக்கை குழு அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக மாநில தலைவர் சண்முகநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என அனைத்து சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் இந்த அரசு செவி சாய்க்கவில்லை.
21 மாத நிலுவை தொகையையும் அரசு வழங்கவில்லை. மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு நடத்த வேண்டும் என கோரிக்கைகயும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக ஒரு நபர் குழு அறிக்கை அளித்தும் அரசு இறுதி நடவடிக்கை எடுக்கவில்லை.
பல்வேறு மக்கள் நல திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. பள்ளி கல்வித்துறை, மருத்துவத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறைகளில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது அதற்கு உரிய அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பணியிடங்களை அரசு தோற்றுவிப்பதில்லை. இதை அனைத்தையும் தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும். ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதை கடுமையாக எதிர்க்கிறோம். அது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். புதிய இளைஞர்களை அரசு பணிக்கு தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில தலைவராக பகவதியப்பனும், மாநில பொதுச்செயலாளராக சுரேசும் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து மற்ற மாநில நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.