தூர்வாரும் பணியின் போது கிணற்றுக்குள் மண் சரிந்து விழுந்து கிரேன் உரிமையாளர் சாவு

செஞ்சி அருகே கிணற்றை தூர்வாரும் பணியின் போது, மண் சரிந்து விழுந்து கிரேன் உரிமையாளர் உயிரிழந்தார்.

Update: 2019-07-06 22:45 GMT
செஞ்சி, 

விழுப்புரம் அருகே உள்ள சி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் ராஜேந்திரன்(வயது 35). இவர் சொந்தமாக கிரேன் வைத்து கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். நகர் கிராமத்தில் உள்ள ஸ்டாலின் என்பவருக்கு சொந்தமான கிணற்றை தூர்வாரும் பணியை செய்து வந்தார். நேற்று காலை ராஜேந்திரன் தனது கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலரை அழைத்துக்கொண்டு வேலைக்கு சென்றார். அப்போது கிரேனை ராஜேந்திரன் இயக்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் மண் சரிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதில் கிரேனுடன் சேர்ந்து ராஜேந்திரனும் கிணற்றுக்குள் விழுந்தார்.

படுகாயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கெடார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்