தீப்பெட்டி உற்பத்திக்கு வரிச்சலுகை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தீப்பெட்டி உற்பத்திக்கு வரிச்சலுகை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2019-07-06 22:45 GMT
கோவில்பட்டி, 

இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் பட்ஜெட் ஏழைகளுக்கானது அல்ல என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். ஆனால் பெரும்பாலான அமைப்பினரும், பொதுமக்களும் பட்ஜெட்டை வரவேற்று உள்ளனர். பட்ஜெட்டின் முழு சாராம்சத்தை அறிந்த பின்னர்தான் கருத்து தெரிவிக்க முடியும். பட்ஜெட்டின் முழு சாராம்சத்தை அறிந்து கொள்ளாமல் கருத்து சொல்வது சரியாக இருக்காது.

தீப்பெட்டி உற்பத்திக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தீக்குச்சி உற்பத்திக்கு 12 சதவீதமாக இருந்த வரியை 4 சதவீதமாக குறைத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தீப்பெட்டி உற்பத்தி தொழிலானது எனது தொகுதி சார்ந்த பிரச்சினை ஆகும். எனவே தீப்பெட்டி உற்பத்திக்கு வரிச்சலுகை வழங்க வலியுறுத்தி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதியுடன், எனது தலைமையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் குழுவினருடன் புதுடெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்கின்றது. எனவே கச்சா எண்ணெய் விலை குறையும்போது, பெட்ரோல், டீசலின் விலையும் குறையும். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கியது தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் ஆய்வுக்குகூட அனுமதி வழங்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

மேலும் செய்திகள்