செல்போன் கடைக்குள் வேன் புகுந்தது- ஆட்டோ டிரைவர் பலி
கரூரில் செல்போன் கடைக்குள் வேன் புகுந்ததில், ரீசார்ஜ் செய்ய அமர்ந்து இருந்த ஆட்டோ டிரைவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கரூர்,
கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 48). ஆட்டோ டிரைவர். நேற்று மதியம் இவர், கரூர் பழைய திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரின் அருகேயுள்ள செல்போன் கடைக்கு ரீசார்ஜ் செய்வதற்காக வந்தார். அப்போது கடையின் வெளிபுறத்தில் அ வர் அமர்ந்திருந்தார். அப்போது சாலையோரமாக வேனை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் அங்குள்ள ஒரு கடைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த கார்த்திக் என்பவர் திடீரென வேனை இயக்கினார். இதில் கட்டுப்பாட்டை இழந்தவேன் தறிகெட்டு ஓடியது.
இதனால் சாலையிலிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் அந்த வேன் எதிர்பாராதவிதமாக செல்போன் கடைக்குள் புகுந்து, ஆனந்தகுமார் மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஆனந்தகுமார் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே வேனை இயக்கிய கார்த்திக் கீழே குதித்து தப்பியோடி தலை மறைவாகிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் டவுன் போலீசார் ஆனந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் செல்போன் கடையின் முன் புறபகுதி பெரும் சேத மடைந்தது. மேலும் செல்போன் கடையினுள் நின்று கொண்டிருந்த ஊழியர் ஒருவர், மயிரிழையில் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து நடந்தது எப்படி? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வேனை இயக்கிய கார்த்திக் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கருரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.