லோக் அதாலத் விழிப்புணர்வு ‘ஸ்டிக்கர்’ - நீதிபதி கோமதி நாயகம், அரசு பஸ்களில் ஒட்டினார்

குமரி மாவட்டத்தில் 13-ந் தேதி நடைபெற உள்ள லோக் அதாலத் நிகழ்ச்சி குறித்த விழிப்புணர்வு ‘ஸ்டிக்கர்‘களை அரசு பஸ்களில் மாவட்ட நீதிபதி கோமதிநாயகம் ஒட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2019-07-05 22:45 GMT
நாகர்கோவில்,

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை வருகிற 13-ந் தேதி லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) மூலம் விசாரித்து சுமூக தீர்வுகாண சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை ஆகிய கோர்ட்டுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் 3 ஆயிரத்து 813 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட இருக்கிறது.

லோக் அதாலத் நிகழ்ச்சி குறித்த விழிப்புணர்வு ‘ஸ்டிக்கர்‘ ஒட்டும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நடந்தது. அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் அரசு பஸ்களில் குமரி மாவட்ட நீதிபதி (பொறுப்பு) கோமதிநாயகம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி நம்பி, மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம், லோக் அதாலத் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி மகிழேந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராபின்சன் ஜார்ஜ், சார்பு நீதிபதி ராமலிங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அரவிந்த், வணிக மேலாளர் கோபாலகிருஷ்ணன், ராணித்தோட்டம்-2 பணிமனை மேலாளர் பெருமாள், சட்டப்பிரிவு மேலாளர் ராஜகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பூதப்பாண்டி, பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை கோர்ட்டுகள் சார்பிலும் அந்தந்த பகுதிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மேலும் செய்திகள்