வேடசந்தூர் அருகே, குடிநீர் குழாயை அகற்ற எதிர்ப்பு - கிராம மக்கள் சாலை மறியல்

வேடசந்தூர் குடிநீர் குழாயை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-05 22:45 GMT
வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் தரைமட்ட நீர்த்தேக்கதொட்டியில் இருந்து பூத்தாம்பட்டி, மாரம்பாடி வழியாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் தாடிக்கொம்புவுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் மாரம்பாடியில் வரட்டாறு அருகே வால்வு அமைக்கப்பட்டுள்ளது. இதில் குடிநீர் வீணாக வெளியேறி ஆற்றில் சென்றதால் கிராம மக்கள் திருகு குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் பிடித்து வந்தனர்.

மேலும் திருகு குடிநீர் குழாய் அமைக்கப்பட்ட இடத்தில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று மாரம்பாடி கிராம மக்கள் சார்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி நிர்வாக பொறியாளர் தலைமையில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் வந்து மாரம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள திருகு குடிநீர் குழாயை அகற்ற முயன்றனர்.

இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். மேலும் கிராம மக்கள் மாரம்பாடியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். மேலும் கிராம மக்கள் எதிர்ப்பு காரணமாக குடிநீர் குழாயை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்