ஹைட்ரோ கார்பனுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட வேண்டும் முதல்-அமைச்சருக்கு காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தல்
ஹைட்ரோ கார்பனுக்கு தடை விதித்து முதல்-அமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர்,
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஹைட்ரோ கார்பன் எடுக்க திறந்தவெளி உரிமம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3-வது சுற்று ஏலத்தில் நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் 459.89 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஓ.என்.ஜி.சி.க்கு மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் இன்னொரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403.41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ஓ.என்.ஜி.சி.க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என மக்களவையில் தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு பேசியதற்கு விடையளித்த மத்தியமந்திரி தர்மேந்திரபிரதான் இது பற்றி திறந்த மனதுடன் விவாதிக்க தயாராக இருக்கிறோம். மக்கள் கருத்துகளை அறிந்து செயல்படுவோம் என்று கூறினார்.
ஆனால் அடுத்த 2 நாட்களில் 3-வது கட்டமாக ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது. தமிழ்நாட்டு வேளாண்மையை அழித்து, கனிமவேட்டை நிறுவனங்களுக்கு காவிரி படுகை உள்ளிட்ட சாகுபடி நிலங்களை ஒப்படைப்பது என்பதில் நரேந்திர மோடி அரசு தீவிரமாக இருப்பதையே இன்றைய ஏல முடிவு அறிவிப்பு தெரிவிக்கிறது.
அதேவேளை தமிழ்நாடு சட்டசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பேசிய தி.மு.க.வினருக்கு விடையளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்தியஅரசை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கூற்று தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வமான முடிவு என்றால் ஏற்கனவே 2 கட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கும், வேதாந்தாவுக்கும் விடப்பட்ட ஏலத்தையும், இன்றைக்கு 3-வது கட்டமாக ஓ.என்.ஜி.சி.க்கு விடப்பட்ட ஏலத்தையும் தமிழ்நாட்டில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு வெளிவர வேண்டும்.
இல்லையென்றால் மத்தியமந்திரிகளும், அமைச்சர்களும் கூட்டாக பேசி கொண்டு தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மறுஆய்வு செய்வதுபோல் மாறுவேடம் போடும் சூழ்ச்சியாகவே இது அமையும். தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்கக்கூடாது என்று கிட்டத்தட்ட அனைத்து மக்களும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். தெருவுக்கு வந்து போராடுகிறார்கள்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குழப்பத்திற்கு இடமில்லாமல் மறைந்த ஜெயலலிதா 2015-ம் ஆண்டு வெளியிட்ட அரசாணை 186-ன்படி தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் குறித்து ஆய்வு செய்யவோ, அதை எடுக்கவோ மத்தியஅரசுக்கும், தனியார் துறையினருக்கும் அனுமதி வழங்க மாட்டோம் என ஹைட்ரோ கார்பனுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட வேண்டும். ஹைட்ரோ கார்பனை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை கைவிட வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.