தூத்துக்குடி அருகே முதியவர் அடித்துக்கொலை 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி அருகே முதியவரை அடித்துக் கொலை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-05 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் செங்கோல்மணி நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 75). இவருடைய மகன் ஜெனிட்டன் (28). இவர்கள் இருவரும் மீனவர்கள். இந்த நிலையில் ஜெனிட்டன் நேற்று முன்தினம் இரவு சமத்துவபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது குடித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு மது குடிக்க வந்த தருவைகுளம் 125 வீடு காலனியை சேர்ந்த பிரதீப்ராஜ் (30), நவமணி நகரை சேர்ந்த கவாஸ்கர் (31), அவருடைய தம்பி குமார் ஆகியோருக்கும், ஜெனிட்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து ஜெனிட்டன் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது பிரதீப்ராஜ், கவாஸ்கர், குமார் ஆகியோர் பின்தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்றனர்.

ஜெனிட்டன் வீட்டில் வைத்து 3 பேரும் தகராறு செய்து அவரை தாக்கினர். அப்போது அங்கிருந்த பால்ராஜ் அவர்களை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் பால்ராஜை அடித்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த தருவைகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பிரதீப்ராஜ், கவாஸ்கர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் குமாரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்