வேலூர் சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்: 2 சிறைக்காவலர்கள் பணியிடை நீக்கம்
வேலூர் மத்திய சிறையில் இருந்து ஆயுள்தண்டனை கைதி தப்பி ஓடியது தொடர்பாக 2 சிறைக்காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த அருணகிரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் கடந்த 2017–ம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூர் மத்திய சிறையில் நன்னடத்தை கைதிகள் சிலர் ஜெயிலுக்கு வெளியில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி கடந்த 3–ந் தேதி சிறைக்கு வெளியே உள்ள தோட்டத்தில் நன்னடத்தை கைதிகள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களை சிறைக்காவலர்கள் கண்காணித்து கொண்டிருந்தனர். பின்னர் பகல் 12.30 மணிக்கு அனைவரும் மதிய உணவுக்காக மீண்டும் சிறைக்கு சென்றனர். அப்போது வெளியே சென்ற அனைத்து கைதிகளும் வந்துவிட்டார்களா என்று சிறைக்காவலர்கள் பார்த்தபோது ரமேசை காணவில்லை. அவர் தப்பி ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறைக்காவலர்கள் அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரமேஷ் தப்பியது தொடர்பாக அவர் தோட்டவேலையில் ஈடுபட்டிருந்தபோது கைதிகளுக்கு காவலுக்காக சென்றிருந்த முதன்மை காவலர் குமரவேல், தலைமை காவலர் திருமலை ஆகிய இருவரையும், வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.