குவைத்தில் வேலை செய்த இடத்தில் கொடுமை: 3-வது மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பிய பெண் சென்னை திரும்பினார்

குவைத்தில் வேலை செய்த இடத்தில் கொடுமைகளை தாங்க முடியாமல் 3-வது மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பிய பெண், சென்னை திரும்பினார்.

Update: 2019-07-04 23:45 GMT
ஆலந்தூர்,

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 32). கணவரால் கைவிடப்பட்டு 2 குழந்தைகளுடன் கோவையில் உள்ள பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

திருச்சியை சேர்ந்த 2 பெண் ஏஜெண்டுகள் சுமதியிடம் குவைத்தில் வீட்டு வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் என்றும் ஆசைவார்த்தைகள் கூறி பாஸ்போர்ட்டு மற்றும் விசா எடுப்பதற்கு சுமதியிடம் பணம் பெற்றனர். பின்னர் கடந்த மே மாதம் அவரை குவைத் அனுப்பி வைத்தனர்.

குவைத் நாட்டில் உள்ள ஏஜெண்டு, சுமதியை வீட்டு வேலைக்கு அனுப்பிவைத்தார். அங்கு 20 மணிநேரம் வேலை செய்யவேண்டும். சம்பளம் மற்றும் சாப்பாடு கொடுக்காமல் துன்புறுத்தப்பட்டார். வீட்டு வேலை செய்யவில்லை என்றால் அடித்து உதைத்து, இருட்டு அறையில் அடைத்து சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கொடுமைகளை தாங்க முடியாமல் சுமதி, அங்கிருந்து தப்பிக்க அந்த வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அதில் அவரது இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்தன. படுகாயத்துடன் உயிர் தப்பிய அவர், அங்குள்ள ஆஸ்பத்திரியில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார்.

குவைத்தில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர், இந்திய தூதரகத்திற்கு சுமதிக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி தகவல் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் நேரில் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சுமதியிடம் விசாரித்தனர்.

அப்போது சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல உதவி செய்யும்படி அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

சுமதியின் நிலையை அறிந்த அவரது பெற்றோர், சென்னையில் உள்ள தனியார் தொண்டு நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அந்த அமைப்பின் மூலமாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுமதி தாயகம் திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து சுமதி, குவைத்தில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தார். விமான நிலையத்தில் சுமதியின் தாயார் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அவரை வரவேற்று அழைத்து சென்றனர்.

சுமதிக்கு தேவையான மருத்துவ உதவிகளை தொண்டு அமைப்புகள் மூலமாக செய்யப்பட்டது. மேலும் குவைத்தில் உள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுமதியின் நிலைமை அறிந்து அவருக்கான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கான நிதியை திரட்டி மருத்துவ உபகரணங்களை சுமதியின் தாயாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் சுமதி கூறியதாவது:-
குவைத்துக்கு சென்று மிகுந்த சிரமப்பட்டேன். ரூ.1 லட்சம் தந்தால்தான் விடுவேன். இல்லை என்றால் பிணமாகத்தான் அனுப்புவோம் என்று ஏஜெண்டுகள் மிரட்டினார்கள்.

அந்த கொடுமைகளுக்கு பயந்துதான் 3-வது மாடியில் இருந்து குதித்தேன். என்னை மீட்டு சொந்த ஊருக்கு திரும்ப உதவிய இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்