விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட மாணவர்கள் முயற்சி மெலட்டூரில் பரபரப்பு

மெலட்டூரில் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட மாணவர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-04 22:45 GMT
மெலட்டூர்,

தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2017-2018 மற்றும் 2018-2019 கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை. இவர்கள் தற்போது கல்லூரிகளில் படித்து வரும் நிலையில் தற்போது 2019-2020 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த விலையில்லா மடிக்கணினி கிடைக்காத மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி திருகருக்காவூர்-தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபடுவதற்காக நேற்று பள்ளி முன்பு திரண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் தலைமையிடத்து துணை தாசில்தார் தர்மராஜ், வருவாய் ஆய்வாளர் கலையரசி, மெலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அய்யாக்கண்ணு, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்கள் 2 ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு முதலில் மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள், 3 மாதத்துக்குள் மடிக்கணினி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் மெலட்டூரில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்