சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் நில அளவீடு

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் வருவாய்த்துறையினர் நில அளவீடு செய்தனர்.

Update: 2019-07-04 22:45 GMT
ஊட்டி,

கடந்த 1905-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஊட்டி ஹோபர்ட் பூங்கா என்று அழைக்கப்பட்ட இடத்தில், 54 ஏக்கர் பரப்பில் ஏ.பி.சி. அமைப்பு சார்பில் மைதானம் அமைக்கப்பட்டது. அந்த மைதானத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் புகழ் பெற்ற குதிரை பந்தயத்தை நடத்தி வருகிறது. ஊட்டி குதிரை பந்தய மைதானம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்பதால், குத்தகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் முறையாக குத்தகை கட்டணம் செலுத்தாததால், அந்த 54 ஏக்கர் நிலத்துக்கு ரூ.642 கோடி குத்தகை பாக்கி உள்ளதாக வருவாய்த்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையில் ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சி விழாவின்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குதிரை பந்தய மைதான பகுதியில் இருந்து 4 ஏக்கர் நிலத்தை அரசு எடுத்து, வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் ஏ.டி.சி. அருகே குதிரை பந்தய மைதானத்தின் ஒரு பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவை வருவாய்த்துறையினர் நில அளவீடு செய்தனர். அப்போது அந்த 4 ஏக்கர் நிலத்துக்குள் குதிரை ஓடுதளம் வந்தது. இதனால் குதிரை பந்தய நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நிலத்தை கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மைதானத்தில் ஓடுதளத்தை பாதிக்காமல், காலியாக உள்ள இடங்களை குதிரை பந்தய நிர்வாகத்துடன் வருவாய்த்துறையினர் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் தாசில்தார் மகேந்திரன் மற்றும் நில அளவை அதிகாரிகள், குதிரை பந்தய நிர்வாகிகளுடன் மைதானத்தில் ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் மைதானத்தின் ஓடுதளத்தை பாதிக் காமல் காலியாக உள்ள இடங் களை நில அளவீடு செய்தனர்.

இதுகுறித்து ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் கூறும்போது, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி குதிரை ஓடுதளம் பாதிக்காமல் 4 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தும் வகையில் இன்று(நேற்று) குதிரை பந்தய மைதானத்தில் ஆய்வு மற்றும் நில அளவீடு செய்யப்பட்டது. இந்த விவரங்கள் வருகிற 8-ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் வருவாய்த்துறை மூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது. மைதானத்தின் குத்தகை தொகை ரூ.642 கோடி பாக்கி உள்ளது. இதுகுறித்து ஐகோர்ட்டில் தனியாக வழக்கு நடைபெற்று வருகிறது என்றார். 

மேலும் செய்திகள்